இதுதொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியுள்ளதாவது, “ தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய மருத்துவக் கழகம் தனது விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவந்து இந்த இட ஒதுக்கீட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்தது. அதே சமயம் நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் 10 முதல் 30 விழுக்காட்டை ஊக்க மதிப்பெண்ணாக வழங்கலாம் என விதிமுறைகளில் கொண்டு வந்தது. இந்த மதிப்பெண்ணும் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பால் 100 விழுக்காடு இடங்களும் அகில இந்திய அளவில் பகிரங்கப் போட்டிக்கு சென்றுவிட்டது. இதனால் தமிழ்நாடு அரசின் மருத்துவ உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான பிரத்யேக உரிமை பறிக்கப்பட்டது. அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடும் பறிபோனது. அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளே வழங்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்புக்குரியது.