சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், மாநில செயலாளர் சாந்தி ஆகியோர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “ மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும் போதெல்லாம், மருத்துவக் கல்வியிலும், சிகிச்சை முறைகளிலும் மூடநம்பிக்கைகளையும், அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளையும், போலி அறிவியலையும் புகுத்தி வருகிறது.
ஆயுர்வேதம் என்பது பண்டைய இந்திய மருத்துவ முறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதனை இந்து மருத்துவ முறையாக கருதுவது தவறு. ஆயுர்வேத மருத்துவத்தில் முதுநிலை அறுவை சிகிச்சை என்ற படிப்பை உருவாக்கி, ஒரே அறுவை சிகிச்சை நிபுணர், பல், கண், காது மூக்குத் தொண்டை அறுவை சிகிச்சை செய்யலாம் என அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனால் மருத்துவ சேவையின் தரம் பாதிக்கும். ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற பெயரில், யோகா மற்றும் ஆயுஷ் பாடத்திட்டங்கள் நவீன அறிவியல் மருத்துவத்தில் புகுத்தப்படுகிறது. தேசிய கல்வி கொள்கை 2010, தேசிய நலக்கொள்கை 2017, தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019 போன்றவை அதற்கேற்பவே உருவாக்கப்பட்டுள்ளன.