இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலச் செயலாளர் சாந்தி ஆகியோர், “அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி நியமனம் என்பது ஒவ்வொரு ஆண்டும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது. அனுபவம், பணிமூப்பு அடிப்படையிலும் பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
ஆனால், தற்போது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் பிறப்பித்துள்ள ஆணையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் மூன்று பேர் கொண்ட குழு மூலம் தற்காலிகமாக கவுரவ பேராசிரியர்களை நியமனம் செய்துகொள்ளவும் அவ்வாறு நியமிக்கப்பட உள்ள பேராசிரியர்களுக்கான சம்பளம் குறித்து அக்குழுவே முடிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
ஏராளமான அரசு மருத்துவர்கள் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் இந்தச் சூழலில், வெளியில் உள்ள மருத்துவர்களையும், ஓய்வுபெற்றவர்களையும் பேராசிரியர்களாக கவுரவ அடிப்படையில் பணிநியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முயல்கிறது. இது ஏற்கெனவே நீண்டகாலமாக அரசுப்பணியில் இருக்கும் மருத்துவர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் எதிரானது.
எம்.ஆர்.பி. என்ற மருத்துவப் பணியாளர் தேர்வாணைய அமைப்பை உருவாக்கிவிட்டு, அதன்மூலம் மருத்துவர்களை நியமிக்காமல் நேரடியாக கவுரவ அடிப்படையில் பணி நியமனம் செய்வது ஊழலுக்கும் முறைகேட்டிற்குமே வழிவகுக்கும். அரசுப்பணிக்கு, குறைந்த ஊதியத்தில் மருத்துவர்களை நியமிக்கும் நோக்கமும் அவர்களின் உழைப்பைச் சுரண்டும் நோக்கமும் இத்தகைய பணி நியமனங்களில் அடங்கியுள்ளது.
இப்பணி நியமனங்கள் மூலம் தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்லூரிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏற்கனவே, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களைக் கூட்டாமல், இந்திய மருத்துவக் கவுன்சில் கூறிய குறைந்தபட்ச மருத்துவர்கள் ஆணையின் மூலம், சுமார் 800 பணியிடங்களை தமிழ்நாடு அரசு ஒழித்துக் கட்டியுள்ளது. இந்த ஆள்குறைப்பு ஆணையை ரத்து செய்யாமல், இந்தப் பணிநியமனம் என்பது, வேலைவாய்ப்பின்றி உள்ள இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும்.
இப்பணி நியமனங்களை கல்லூரிகளே மேற்கொள்வதால், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பாதிக்கப்படும். வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களையும் இவ்வாறு பணிநியமனம் செய்யும் வாய்ப்புள்ளது. கவுரவ மருத்துவப் பேராசிரியர்களுக்கு, ஒரு நிரந்தர மருத்துவருக்கு உரிய பொறுப்புகள் இருக்காது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். சேவைத் தரமும் பாதிக்கும்.
கவுரவப் பணி நியமனம் ஊழலுக்கும், முறைகேட்டுக்குமே வழி வகுக்கும் - மருத்துவர் ரவீந்திரநாத் எனவே, உலக வங்கியின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாடு அரசு கவுரவ பேராசிரியர்கள் நியமனத்தை கைவிட வேண்டும்.
மேலும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வரும் நிதியிலிருந்தே மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முறைகேடு நடக்கிறது. தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தால் மேலும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடைபெறும்” எனக் கூறினர்.
இதையும் படிங்க: நல்லாட்சிக் குறியீட்டில் தமிழகம் முதலிடம்! - அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்