இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள காணொலியில், ” ’தேசிய கல்விக் கொள்கை 2020’ மூலம், குலக்கல்வி திட்டத்தையும், சாதி அடிப்படையிலான பரம்பரை தொழில்களை கொண்டு வரவும் மத்திய அரசு முயல்கிறது. இது நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது.
மேலும், மும்மொழி திட்டத்தை கட்டாயப்படுத்தி, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு வழி வகுக்கிறது. இந்தியாவை இந்து நாடாக மாற்றும் நோக்குடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய கல்விக் கொள்கை, அறிவியல் மனப்பான்மையை ஊக்கப்படுத்துவதற்கு எதிராகவும், அறிவியல் ரீதியான உலகப் பார்வையை உருவாக்குவதற்கு எதிராகவும் உள்ளது. இந்தியாவின் நவீன அறிவியல் மருத்துவத்தில், போலி மருத்துவ அறிவியலை, அறிவியல் ரீதியாக காலாவதியான மருத்துவக் கோட்பாடுகளை திணிப்பதற்கு முயல்கிறது.
அதோடு, அலோபதி மருத்துவ மாணவர்கள் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளின் அடிப்படை புரிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கிறது இக்கொள்கை. இத்தகைய ஒன்றிணைக்கும் போக்கு, மோசமான விளைவுகளை மருத்துவக் கல்வியில் உருவாக்கும். மருத்துவ சேவையின் தரமும் பாதிக்கும்.