ஊதிய உயர்வு, பதவி உயர்வு, அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் ஏற்கனவே இருந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் இந்தக் காலவரையரையற்றப் போராட்டம், கடந்த 25ஆம் தேதி தொடங்கி ஆறாவது நாளாக தொடர்கிறது.
இதனிடையே சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஐந்து மருத்துவர்கள் ஆறாவது நாளாக சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில் மூன்றுபேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது மேலும் மூன்று மருத்துவர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன்,
பட்டினிப் போராட்டத்துக்கு எந்தவித அரசியல் தலையீடோ, உள் நோக்கமோ கிடையாது. தங்களின் வேதனையின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம் எனவும், அடிப்படை ஊதியத்தில் பிற மாநில மருத்துவர்களைவிட 50 ஆயிரம் ரூபாய் குறைவாக பெறுவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவர்கள் போராடுவது சரியில்லை எனக்கூறிவிட்டு மற்றொரு சங்கத்தை அழைத்துப் பேசுவது என்பது உண்மைக்குப் புறம்பானது என்ற அவர், அரசு அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக விளக்கம் அளித்தார். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தெருக்களில் நின்று போராடவும் தயார் எனவும் லட்சுமி நரசிம்மன் தெரிவித்தார்.
மேலும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தெருக்களில் நின்று போராடவும் தயார் என, லட்சுமி நரசிம்மன் தெரிவித்தார்.