சென்னை: சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில், மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், "தற்போது பூஸ்டர் தடுப்பூசி சரிவர வழங்கப்படாத நிலை உள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் இதுவரை 43 லட்சம் மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் சுனக்கம் காட்டுகிறது அரசு. இந்தியா முழுவதும் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும்.மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்து இங்கு பயிற்சி முடித்தும் மருத்துவர்களாக பணியாற்றிடும் வாய்ப்பை தேசிய மருத்துவ ஆணையம் 10 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைத்ததால் மாணவர்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர். ஆகவே, பயிற்சி முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை மாநில அரசும் வலியுறுத்த வேண்டும்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவரும் பட்சத்தில் மத்திய அரசை கண்டித்து மருத்துவ மாணவர்களுடன் அவரது பெற்றோர்களை இணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், உக்ரைன் மருத்துவ மாணவர்களின் மருத்துவ படிப்பு தொடர்பாகவும் வரும் 12ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
ரஷ்யா- உக்ரைன் இடையே நிறுத்த முடியாத போரினால் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. அத்தகைய மாணவர்கள் கல்வியை இந்தியாவில் தனியார் கல்லூரியில் அதே கட்டணத்தில் தொடர மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதனால் 20 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்கள்.
மாணவர்கள் பிரச்சனையை தீர்க்காமல் இருப்பது கவலையளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அனைத்து விதமான சிகிச்சையும் இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலை வேளையில் செயல்படும் ஓ.பி. பணிகள் அனைத்தும், மாலை 4 முதல் இரவு 10 மணி வரை அனைத்து துறைகளிலும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அமர்நாத் மேக வெடிப்பு: நிலச்சரிவு ஆபத்திலிருந்து தப்பிய 25 பேர் சென்னை வருகை