சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐந்தாவது முறையாக ஆலோசனை மேற்கொண்டார்.
முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பிறகு தலைமைச் செயலக வளாகத்தில், மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது, ”கரோனா பாதிப்பு அதிகமாகும் நேரத்தில் இறப்புகளும் அதிகரிக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும்.
சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க முதலமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளோம். கரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என ஏற்கனவே கூறியிருந்தோம். அதுபோல் தான் தற்போது நடந்து வருகிறது. சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முகக்கவசம், தனி மனித இடைவெளி போன்றவற்றால் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
ஓரிரு நாள் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் அறிகுறிகள் இருந்தால்கூட மருத்துவமனைக்கு சென்று மக்கள் பரிசோதித்து கொள்ள வேண்டும். நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் கரோனா கண்டறிதல் சோதனைகள் அதிகம் எடுக்கப்படுகின்றன. அதனாலேயே தொற்றும் அதிகமாக கண்டறியப்படுகிறது. கரோனா சிகிச்சைக்காக சென்னையில் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தளர்வுகளால் தான் மாநிலத்தில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது“ என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்தது.
சென்னையில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க பரிந்துரை இதையும் படிங்க: சென்னையில் 10 மண்டலங்களில் ஆயிரத்தைத் தாண்டிய கரோனா!