இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முஸ்லீம்களுக்கு குடியுரிமையை மறுக்கும் வகையிலும், குடியுரிமை அற்றவர்களாக அவர்களை மாற்றும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகளும், முஸ்லீம் அமைப்புகள் உள்ளிட்ட சிறுபான்மை அமைப்புகளும், போராடி வருகின்றன.
நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் தன்னெழுச்சியாக இச்சட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, முஸ்லீம் அமைப்புகள் சார்பாக, சென்னை தண்டையார் பேட்டையில் கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டம் நடந்து வருகிறது.