தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல் இன்று வரை நீடித்து வருகிறது. இப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக பலக்கட்ட ஊரடங்கு, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் நேற்று வரை 5,47,337 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,91,971 பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,871 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், மாநிலத்தின் பொருளாதார சூழல் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் வேண்டுகோள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, இம்மாதம் 7 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, மக்கள் அதிகளவில் வெளியில் வரவும், பேருந்து, தொடர்வண்டிகளில் பயணம் மேற்கொள்ளவும் தொடங்கி விட்டனர். ஆனால், இப்பயணங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை அரசோ, மக்களோ பின்பற்றுவதாக தெரியவில்லை. இதனால் நோய் தொற்று தீவிரமாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவர் சாந்தி, " இந்த காலக்கட்டத்தில் முடிந்த அளவு பயணங்களை தவிர்ப்பதே நல்லது. பேருந்து, தொடர்வண்டி போன்றவற்றில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணிக்க வேண்டும். முகக்கவசம், கையுறைகளை கண்டிப்பாக அணிதல் அவசியம். அதுமட்டுமின்றி சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த உடன் குளிப்பது நல்லது. பயன்படுத்திய முகக்கவசத்தை மீண்டும் பயன்படுத்தக்கூடாது " என அறிவுறுத்தினார்.