சென்னை: கறுப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சஞ்சய் மோகந்தி நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த கேள்வியும் பதிலும் பின்வருமாறு;
கேள்வி: கரோனா காலத்தில்கறுப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நோய் எப்படி வருகிறது?
கரோனா காலத்திற்கு முன்னரும் இந்த நோய் இருந்தது. சர்க்கரை நோயாளிகள், உடலில் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால் இந்தநோய் பாதிப்பு ஏற்படும். ஆனால், கரோனா தொற்று காலத்தில் இந்த நோய் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரத்தில் பத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். சர்க்கரை நாேய் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகளவிலும், மற்ற நோயாளிகளுக்கு குறைவாகவும் இருக்கிறது. கரோனா தொற்றால் உடம்பில் கறுப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது.
மருத்துவர் சஞ்சய் மோகந்தி கரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்த பின்னர், பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு பத்து நாட்கள் கடந்தப் பின்னர் கரோனா தொற்று தாக்கம் தீவிரமாக அதிகரிக்கிறது. அப்போது, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, கறுப்பு பூஞ்சை நோய் தாக்கம் ஏற்படலாம். முதலில் மூக்கு, கண், அதனைத் தொடர்ந்து மூளையையும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும்.
காது, மூக்கு, தொண்டை மருத்துவரை முதலில் பாா்த்து பரிசோதனை மேற்காெள்ள வேண்டும். அப்போது உடம்பில் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் , கரும்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவதுடன், மருத்துவரின் தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். இது மிகவும் கொடுமையான வியாதியாக உள்ளது. கரோனா காலத்தில் கறுப்பு பூஞ்சை நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயரிழக்க நேரிடும்.
கேள்வி: கறுப்பு பூஞ்சை நோய் தாக்கம் ஏற்பட்டால் உடலில் பாதிப்பு எவ்வாறு தென்படும்?
கறுப்பு பூஞ்சை நோய் முதலில் மூக்குப்பகுதியில்தான் ஏற்படும். அந்தப் பகுதியில் கறுப்பு நிறத்தில் இருக்காது. உடம்பில் உள்ள தோல் பகுதி செயல்பாடு இல்லாமல், ரத்த ஒட்டமும் இல்லாவிட்டால் அந்தப் பகுதி கறுப்பு நிறத்தில் மாறிவிடும். மேலும், நோய் தாக்கினால் மூக்கு, கண் பகுதியில் பாதிப்பு ஏற்படும். கண் மூடுவதில் சிரமம் ஏற்படும். மனத்தில் ஒரு விதமான குழப்பமான நிலை ஏற்படும்.
எனவே கறுப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகளான மூக்கில் ரத்தம் வழிதல், முகம் வீக்கம் அடைதல், கண் தெரியாமல் போவது , பல் லேசாக ஆடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். இந்த நோய் மிகவும் மோசமான நோயாகும்.
கேள்வி: கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டால் போதுமா?
கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அகற்றினால் போதாது, தொடர்ந்து அவர்களுக்கு மருந்து அளிப்பதுடன், மருத்துவரின் தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது மூன்று மாதங்கள் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற வேண்டும். உலகளவில் கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காடு பேர் உயிரிழந்துள்ளனர்.
கேள்வி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டுமா?
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 15 நாட்கள் கடந்த பின்னர் குணமடைந்து விட்டதாக கூறுகின்றனர். அவர்கள் மீண்டும் பரிசோதனை செய்துக் கொள்வது சிறந்தது. கரோனா தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள், மிதமாக பாதிக்கப்பட்டவர்கள் , தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் என இல்லாமல் அனைவரும் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆக்சிஜன் சிகிச்சை பெற்றவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டவர்கள் போன்றோர்களுக்கு அதிக பாதிப்பு இருப்பதால் அனைவரும் பரிசோதிக்க வேண்டும். சில நாேயாளிகளை மாத்திரை மூலம் குணப்படுத்தலாம், சிலருக்கு அறுவை சிகிச்சைவரை செய்ய வேண்டியதிருக்கும்.
கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே முறை அறுவை சிகிச்சை செய்தால் போதுமானது அல்ல. உடலில் உள்ள இறந்த செல்களையும் எடுக்க வேண்டும். அதன் பின்னர்தான் மருந்துகள் உடம்பில் நன்றாக வேலை செய்யும்.
கேள்வி: கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை நபர்களுக்கு கரோனா காலத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள்?
கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என ஆண்டிற்கு ஐந்து நோயாளிக்கு மட்டும் அறுவை சிகிச்சை செய்வோம். கடந்த 15 நாட்களில் 10 அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அவர்களில் ஆறு பேர் சர்க்கரை நோயாளிகள், நான்கு நோயாளிகள் கரோனா சிகிச்சைக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு வந்தவர்கள். கண்ணில் பாதிப்பு ஏற்பட்ட நான்கு நோயாளிகள் என 14 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அதில், ஒரு நோயாளிக்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளது. அவர் குணமடைவது என்பது மிகவும் சிரமம். மற்ற நோயாளிகளுக்கு மூக்கில் மட்டும் பூஞ்சை படிந்து இருந்தது. அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டு மருந்துகள் அளித்து வருகிறோம்.
பொது மக்கள் மருந்தகத்திற்குச் சென்று தானாக மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. மருத்துவர்களின் அறிவுரையின் படித்ததான் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று வந்தபின்னர் தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டு, தேவைப்பட்டால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.
மேலும், நோய் வராமல் தடுப்பதற்கு வீட்டில் உள்ள ஏசியின் பில்டரை துடைத்து போட வேண்டும். வீட்டின் மாடியில் தோட்டம் வைத்தால் அதனை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கரோனா நோயாளிகளும், நோய் தொற்று வந்தவர்களும் முககவசம் அணிய வேண்டும். கறுப்பு பூஞ்சை நோய் வராமல் பார்த்துக் கொள்வது சிறந்தது. இந்த நோய் புற்று நோயை விட மோசமானது.
இதையும் படிங்க: அதிர்ச்சி தகவல்: பேசினால் பரவும் கரோனா!