சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, ”கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் உக்ரைனில் குண்டு வீச்சுக்கு ஆளாகி இறந்துள்ளார். இது மிகவும் வேதனை அளிக்கும் செய்தியாகும்.
மாணவர் நவீனுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கனத்த இதயத்தோடு அஞ்சலியை செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததும், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் உரிய உதவிகளையும் போதுமான வழிகாட்டுதல்களையும் செய்யாததும் அதன் அலட்சியப் போக்குமே மருத்துவ மாணவர் நவீன் மரணத்திற்கு காரணம்.
இனியும் கால தாமதம் செய்யாமல் மத்திய அரசு இந்திய மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும். இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் பாதுகாப்பாக உக்ரைனிலிருந்து வெளியேற உக்ரைன் மற்றும் ரஷ்ய அரசு உதவ வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். அதற்குத் தேவையான தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்.