தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கட்சிகளின் பிரச்சாரம் எடுபடுகிறதா மக்களிடம்? - 2021 சட்டமன்ற தேர்தல்

சென்னை: சாதனைகளை பட்டியலிடும் அதிமுக, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் திமுக, மாற்று அரசியல் பேசும் மநீம. மக்களின் மனங்களை யாருடைய பிரச்சாரம் வெல்லப்போகிறது? ஓர் அலசல்.

election
election

By

Published : Feb 26, 2021, 8:30 PM IST

மாநிலத்தின் ஏதோ ஒரு மூளையில் அதிமுக அரசின் சாதனைகள் இவை என மக்களிடம் பட்டியலிட்டு கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு எதிராக ஏதோ ஒரு மாவட்டத்தில் நின்று, அதிமுக ஆட்சியின் ஊழல்கள் என அடுக்கிக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இவர்களின் யாரது பிரச்சார வியூகம் மக்களிடம் எடுபடப் போகிறது என்பது ஏப்ரல் 6இல் முடிவாகி, மே 2இல் தெரிந்துவிடும்.

ஆளுங்கட்சியாக தான் முன்னெடுத்த திட்டங்களை மையப்படுத்தி 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்று அதிமுக ஒருபுறம் நடக்க, திமுக தரப்பில் ’அதிமுகவை நிராகரிப்போம்’ என ஊர் ஊராக கூட்டம் நடத்துகின்றனர். இந்த தேர்தலில் மூன்றாவது அணியாக நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், அதுவும் தன் பங்கிற்கு, ’சீரமைப்போம் தமிழகத்தை’ என்று இருபெரும் கட்சிகளையும் விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறது.

’வெற்றிநடை போடும் தமிழகம்’ - அதிமுக

அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு, விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு பயிர்க்கடன்கள் தள்ளுபடி பல புதிய அறிவிப்புகளை அதிமுக அறிவித்துள்ளது. இவை தனக்கு தேர்தலில் கைகொடுக்கும் எனவும் அதிமுக நம்புகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால், அதிமுக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்பை எப்படியாவது தனக்கு சாதகமாக அறுவடை செய்துவிட வேண்டும் என, பத்து ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத திமுக, நான்கு மாதங்களாக கடுமையாக முயன்று வருகிறது.

மேலும், கடந்த 10 ஆண்டுகளின் முக்கிய பிரச்சனைகள், ஊழல் குற்றச்சாட்டுகளை மக்களிடையே பல விதமாக பிரச்சாரம் செய்து வருகிறது திமுக. குறிப்பாக, முதலமைச்சர் பழனிசாமி உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை, இருமுறை ஆளுநரை சந்தித்து திமுக மனு அளித்துள்ளது. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமோ, திமுக, அதிமுகவில் இருக்கும் நல்லவர்கள் அனைவரையும் தங்கள் கட்சிக்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இப்படியாக நாளும் ஒரு அறிவிப்பு, குற்றச்சாட்டு, வாக்குறுதி என கனன்று கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் களம்.

உண்மையிலேயே மாற்று அரசியல்தான் பேசுகிறாரா கமல்?

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளரும், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியருமான திருநாவுக்கரசு, "தேர்தல் வெற்றியில் பிரச்சாரத்தின் பங்கு மிகப் பெரியது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தும் கட்சிகள் ஒன்றை உணர வேண்டும். நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட ஒருவரை, மக்கள் எவ்வளவு உற்சாகமாக வரவேற்றனர்? எனவே, ஊழல் இங்கு பரவலாகியுள்ளது, அது சகஜமாகிவிட்டது. இதனால், தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டு எடுபடுமா என்ற சந்தேகம் இருக்கிறது.

அதேபோல், ஆளுங்கட்சி அறிவிக்கும் தேர்தல் நேர புதிய திட்டங்கள், மக்களை ஒரு வித மயக்கத்தில் வைக்குமே தவிர, வாக்குகளாக மாற வாய்ப்புகள் குறைவு. மயக்கம் தெளிந்து நீட், இந்தி திணிப்பு, பாஜக கூட்டணி என யோசித்தால் அது அதிமுகவிற்கு பெரும் சவாலாகிவிடும். மாற்று அரசியல் பேசும் கமல் ஹாசனின் மநீம, கட்சி தொடங்கிய நான்கு ஆண்டுகளில், நிரந்தர தலைவர் கமல் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறது என்றால், இதில் என்ன மாற்று உள்ளது, பெரும் மோசடி. அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லை. எனவே, மாற்று அரசியல், ஊழல் இது போன்ற பிரச்சாரங்கள் தமிழகத்தில் எடுபடாது. சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசும் கட்சிக்குதான் வாக்குகள் கிடைக்கும்" என்றார்.

’அதிமுகவை நிராகரிப்போம்’ - திமுக

கரோனா காலம் என்பதையும் மறந்து நேரடியாக சென்று, ’உங்களுக்காக உழைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என டிரேட் மார்க் புன்முறுவல் வணக்கத்துடன் மக்கள் முன் மன்றாடி நிற்கின்றன அரசியல் கட்சிகள். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான நம்பிக்கை அளிக்கும் ரியாக்‌ஷன் கொடுத்து ’வாய்ப்பளிக்க’ காத்திருக்கின்றனர் ஜனநாயகத்தின் நிஜக் கதாநாயகர்கள்.

இதையும் படிங்க: பொதுத்துறையை அழித்து தனியாருக்கு கொடுப்பது தவறான கொள்கை- கே.எஸ்.அழகிரி பேட்டி

ABOUT THE AUTHOR

...view details