சென்னை: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை உதவியாளர், உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் 61 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க, கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுத்து, கூட்டுறவுத்துறை சார்பில் அரசாணையும் பிறப்பித்து, கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டது.
பின்னர், திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நடந்த ஆய்வு கூட்டத்தில், ஏற்காட்டில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே நடைபெற்று வந்த ஏற்காடு பயிற்சி நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவையும், அரசாணையையும் ரத்து செய்யக்கோரி ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு (LAMP)கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் இன்று (மே 14) தீர்ப்பளித்துள்ளார்.
அதில், "ஏற்காட்டில் அமைய இருந்த பயிற்சி மையத்தை கொடைக்கானலுக்கு மாற்றுவது துறை ரிதியான முடிவு இல்லை, முதல்வர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால், அதை அரசின் கொள்கை முடிவாகத்தான் கருத முடியும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை மாநில அளவிலான மையம் அமைக்க வேண்டுமா? அல்லது தேசிய அளவிலான மையம் அமைக்க வேண்டுமா? என்பது அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது என்பதால், இதில் எந்த முடிவு சரியானது என நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது, அந்த கொள்கை முடிவு தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டதாக கருதினால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே மாநில அளவிலான இரண்டு மையங்கள் உள்ள நிலையில், எவ்வித விவாதங்களும் நடத்தப்படாமல் மேலும் ஒரு மாநில அளவிலான மையத்தை அமைக்க அவசியம் இல்லை என பின்னர் வந்த அரசு எடுத்த முடிவில் தவறு இருப்பதாக காணமுடியாது, மேலும் ஏற்காட்டில் மாநில அளவிலான மையத்தை கைவிடும் முடிவை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என கூறி, சென்றாயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.