தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேரிடர் காலத்தில் மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் - ஸ்டாலின்

சென்னை: பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையால், நோய்த் தொற்று பற்றிய அச்சம் அதிகரித்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.

stalin statement
stalin statement

By

Published : Apr 26, 2020, 3:45 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகரங்களில் நான்கு நாட்கள் ‘முழுமையான ஊரடங்கு’ என, எவ்வித முன் தயாரிப்புகளுமின்றி, திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் அரசு அறிவித்தது, பொதுமக்களை பெரும் அச்சத்துக்கும் பரபரப்புக்கும் உள்ளாக்கியது.

நான்கு நாட்களுக்கு என்ன செய்வது என்ற பதற்றத்திலும், அவசர ஆத்திரத்திலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக நேற்று (ஏப்ரல் 25) மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து, அதனால் நெரிசல் ஏற்பட்டு, இத்தனை நாளும் மக்கள் காத்துவந்த தகுந்த ஒழுங்கு பாதிக்கப்பட்டு, நோய்த் தொற்று பரவல் குறித்த சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் அதிகரித்துள்ளது என்பது வேதனைக்குரிய செய்தி ஆகும்.

பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில், அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்ற எடப்பாடி பழனிசாமி அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையால், நோய்த் தொற்று பரவல் குறித்த பயம் மேலும் அதிகரித்துள்ளது. மக்களின் உயிரைப் பற்றியும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை இல்லாத ஆட்சியாளர்களால், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அனைவரின் நெஞ்சத்தையும் அதிர வைத்துள்ளது.

தொடர்ந்து மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட கள வீரர்களுக்கான பாதுகாப்புக் கருவிகளை வழங்குவதில் அலட்சியம் காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு, அதன் மூலமாக மக்களின் நலனையும் அலட்சியப்படுத்தி, நோய் பரவலை மூன்றாம் நிலைக்குத் தள்ளி வருகிறது.

பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியமே தவிர, அதையே ஒரு வாய்ப்பாகக் கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, இறுதியில் எந்தப் பயனையும் தராது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்கொண்டு, விளம்பர வெளிச்சத்திற்காக ஏங்கி, மக்களின் உயிரோடு விளையாடும் விபரீத போக்கை இப்போதாவது நிறுத்திக் கொண்டு முன்யோசனை நிறைந்து விவேகத்துடன் செயல்படுமாறு அன்புடன் வலியுறுத்துகிறேன்". இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details