இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 7) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர், நெய்வேலி நகர காவல் நிலைய அலுவலர்களின் சித்ரவதைக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை கொலைக்குப் பிறகு உயர் நீதிமன்றம் எச்சரித்தும், தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் “கைது நடவடிக்கைகள்” குறித்து சுற்றறிக்கை அனுப்பியும் இதுபோன்ற காவலர்களின் ‘டார்ச்சரும்’, அதனால் ‘கஸ்டடி’ மரணங்களும் தொடருவது கடும் கண்டனத்துக்குரியது.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல்துறை சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தடுமாறுகிறது என்பதற்கு ஒரு சில காவல் நிலையங்களில் இதுபோன்று நடக்கும் சம்பவங்கள் வேதனையளிக்கின்றன. கடலூர் செல்வமுருகன் மரணத்தை பொறுத்தமட்டில், அவரது மனைவியிடம் “உன் கணவர் மீது உள்ள திருட்டு வழக்குகளை எல்லாம் போட்டு விடுவோம்” என்று எச்சரிக்கப்பட்டதும் “கணவனை காணவில்லை” என்று மனைவி பிரேமா கொடுத்த புகாரை பெறாமல் வடலூர், நெய்வேலி நகர காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் இதயமற்ற முறையில் அலைகழித்தது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.