சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க திமுக முடிவு - DMK's decision to boycott legislative session
சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கப்போவதாக அக்கட்சியின் கொறடா சக்கரபாணி, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி, சபாநாயகர் தனபாலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
கரோனா வைரஸ் தொற்று காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு இருப்பதாக மார்ச் 9ஆம் தேதி கண்டறியப்பட்டு இன்றுடன் ஒன்பது பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தெரிவித்தார். மத்திய அரசு அலுவலகங்களில் பி மற்றும் சி ஊழியர்கள் 50 விழுக்காடு பணிக்கு வந்தால் போதும் என்றும், இந்த நடைமுறை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சரவை செயலாளர், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளை மட்டும் அனுமதிக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தினர்.
இந்நிலையில், தனிமைப்படுத்துவது மட்டுமே கரோனா நோய் தடுப்புக்கு இன்றியமையாத மருந்து என்று உலகம் முழுவதும் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில், தற்போது சட்டப்பேரவையில் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக் கொண்டிருப்பது மக்களின் பாதுகாப்புக்கு உகந்ததாகத் தெரியவில்லை.
எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களை இன்று முதல் திமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.