திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் இன்று நடைபெற்றது.
இதில், அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தின் தொடக்கத்தில் 12 தீர்மானங்களை உதயநிதி ஸ்டாலின் வாசிக்க ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சுஜித், பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ, ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமா லத்தீப் ஆகியோரது மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த மத்திய அரசு, ஆதரவளித்த அதிமுக, பாமக கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுத் தெரிவித்தும், உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், வெற்றிக்கு உழைத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.