தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், பிராட்வேவில் உள்ள தேர்வாணைய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், புரசை ரங்கநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது, அதிமுக அரசிற்கு எதிராகவும், அமைச்சர் ஜெயக்குமாரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கண்டன உரையாற்றிய திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ”இளைஞர்கள் எத்தனையோ கனவுகளோடு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளும் நிலையில், அதை அப்படியே தலைகீழாக மாற்றியுள்ளது தேர்வாணையம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சமூகம் மட்டும் அரசு வேலையில் இருந்த நிலையை மாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது தான் இந்த அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
அரசை நிர்வகிக்கும் பல நிர்வாகிகள் மக்களோடு மக்களாக பணியாற்ற இந்த தேர்வாணையம் மூலம் தான் தேர்வாகின்றனர். அப்படித் தரமான ஆட்கள் தேர்வானால்தான் தரமான ஆட்சியும் நடக்கும். ஆனால், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவது தரங்கெட்ட ஆட்சி என்பதற்கு இந்த தேர்வு முறைகேடே சிறந்த எடுத்துக்காட்டு.