குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மகளிரணி சார்பில், மகளிர் அணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேகர்பாபு , ரங்கநாதன் மற்றும் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய கனிமொழி, “குடியுரிமை சட்டத்திருத்தம் மக்களுக்கு, சமத்துவத்திற்கு எதிரானது. நாம் எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு எதிரானது.
ஈழத்தமிழர்கள் இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவிற்கு தமிழர்கள் என்றாலே பிடிக்காது. அவர்களால் தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாது. வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, பண மதிப்பிழப்பு இவைகளிலிருந்து மக்களை திசைத் திருப்பவே அடுக்கடுக்கான சட்டங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.
நாடு முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இச்சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது மத்திய அரசு காவல் துறையை ஏவி ஆண், பெண் என்று பாராமல் மாட்டை அடிப்பதுபோல் தாக்கியுள்ளனர். இதை சகித்துக் கொண்டிருக்கக் கூடிய சூழலிற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.