சென்னை: தேனாம்பேட்டைஅண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கும் கலைஞர் அரங்கில் நடைபெற்ற, திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை - தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் கலை கதிரவன் - சந்தியா பிரசாத் இணையரின் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று இன்று (பிப். 20) நடத்தி வைத்தார். விழாவிற்கு தலைமையேற்ற ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, ”நேற்றைய நாள் (பிப். 19) நகர்புற உள்ளாட்சி அமைப்புகளினுடைய தேர்தல் நடைபெற்றிருக்கிறது. அது உங்கள் அனைவருக்கும் தெரியும். நேற்று மாலையில் இதே அரங்கத்தில் அன்பகம் கலை இல்லத்தில் நடைபெறவிருக்கும் திருமணத்தையொட்டி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அன்பகம் கலை, கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
மாபெரும் வெற்றி
தேர்தலில் நம்முடைய தோழர்கள் எங்கெல்லாம் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், எங்கெல்லாம் பிரச்சினை வந்திருக்கிறது என்பதையெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு மாவட்டக் கழக செயலாளர்களிடத்திலும் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினர்களிடத்திலும் அவர் தொடர்புகொண்டு பேசிக் கொண்டிருந்தார். இதுதான் திமுக; இதுதான் திமுகவின் தொண்டன்.
நாளை மறுநாள் (பிப். 22) நகர்புற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வரவிருக்கிறது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.