தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"மோடியை ஒன்றிய பிரதமர் என்றே சொல்வோம்" - உதயநிதி ஸ்டாலின்

இந்தி மொழியை மீண்டும் திணிக்க முயற்சி செய்தால், தலைநகர் டெல்லியிலும் போராட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞரணி செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 15, 2022, 12:49 PM IST

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகாவினர் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

'ஒன்றிய பிரதமர்' என்போம்: ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, 'தமிழ்நாட்டின் மொழி உரிமையையும், கல்வி உரிமையும் பறிக்கிற பாசிச பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஒன்றிய அரசு என்று சொன்னால் பிரதமருக்கு கோபம் வருகிறது. எனவே, ஒன்றிய பிரதமர் என்றே சொல்வோம்.

பிரதமர் மோடி, அமித் ஷா நினைப்பதுபோல், இங்கு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை. தற்போது முதலமைச்சராக பன்னீர்செல்வமோ, பழனிசாமியோ அல்ல. தமிழ்நாட்டை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்தி திணிப்புக்கு எதிரான எங்கள் ஆர்ப்பாட்டம், போராட்டமாக மாறுமா என்பது பாஜகவின் கையில்தான் இருக்கிறது. இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி ஆட்சியில் அமர்ந்தது திமுக.

இந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினர் கூட்டம்..

திமுகவின் முக்கியமான கொள்கை இந்தி திணிப்பை எதிர்ப்பது தான். இந்தி திணிப்பு எதிர்ப்பை ஒருபோதும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இந்தியை எந்த வழியில் கொண்டுவர நினைத்தாலும் நாங்கள் சொல்லும் ஒரே வார்த்தை 'இந்தி தெரியாது போடா'.

டெல்லியிலும் போராடுவோம்:மூன்று மொழிப்போரை திமுக சந்தித்த நிலையில், கடைசியாக நடந்த மொழிப்போரில் மாணவர் அணியினர் தீவிரமாக பங்கேற்றனர். மாணவர் அணி, இளைஞர் அணியினர் தீவிரமாக மீண்டும் போராடி இந்தி எதிர்ப்பு போரில் வெற்றி பெறுவோம். இந்தி திணிப்பை கைவிடாவிட்டால் சென்னையில் மட்டுமல்ல, திமுக தலைவர் ஸ்டாலினிடம் அனுமதி பெற்று, தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்துவோம்.

பாஜகவை விரட்டியடிப்போம்: பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் மேற்கு வங்கத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்மையில் பங்கேற்றுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலைப்போல, வரும் 2024 ஆம் ஆண்டு வரும் தேர்தலிலும், பாஜகவை தமிழ்நாட்டில் ஓட ஓட விரட்டி அடிப்போம். 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறந்த தொடக்கமாக, இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தயாநிதிமாறன் எம்பி

வரும் தேர்தல் - மதமே பாஜக பிரச்சாரம்:இந்த ஆர்ப்பாட்டத்தில், தயாநிதிமாறன் எம்.பி. பேசியதாவது, 'நாடாளுமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் மதம் மற்றும் இந்தி எனும் ஆயுதங்களை எடுப்பதே பாஜகவின் வேலை. பாஜக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தற்போது மதம் பிரச்சாரம் மற்றும் இந்தி திணிப்பை தொடங்கிவிட்டது. அமித் ஷாவின் தாய்மொழி குஜராத்தி தானே? அவருக்கு தாய் மொழி பற்று இல்லையா? அண்ணா, கலைஞர், ஸ்டாலின் ஏந்திய இந்தி எதிர்ப்பு கொடியை இன்று உதயநிதி ஸ்டாலின் ஏந்தியுள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கு தைரியம் இருந்தால், சென்னையில் உள்ள ஐஐடியில் இந்தியை கொண்டு வந்து பார்க்கட்டும். உங்கள் பருப்பு தமிழகத்தில் வேகாது' எனத் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் #stophindiimposition என்னும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது. அதேபோல், வாசகங்கள் அடங்கிய பேனர் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டது. 'இந்தி தெரியாது போடா' என்னும் டி-சர்ட் அணிந்தும், 'தமிழ்' எனக் குறிப்பிட்ட தொப்பி அணிந்து, பள்ளி சீருடை அணிந்து மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் காது, வாய் பேசமுடியாத கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இதில், திமுக எம்.பிக்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கிரிராஜன், கனிமொழி சோமு, இளைஞரணி துணைச் செயலாளர்கள் தாயகம் கவி, எஸ்.ஜோயல், ஆர்.டி.சேகர், இளைஞரணி அமைப்பாளர்கள் ஏ.வி.எம்.பிரபாகர் ராஜா, ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ, மாணவர் அணி துணைச் செயலாளர் எஸ்.மோகன் நிர்வாகிகள் சேப்பாக்கம் எஸ்.எச்.ரஹமத்துல்லா, வி.பி.மணி, உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இயக்குநர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details