கடந்த 1964 ஆம் ஆண்டு 5 மே ஆம் தேதி பிறந்த வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் ஆகும்.
இளங்கலை பட்டம் பெற்ற அவர், 1996இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் துரை. ராமசாமியை தோற்கடித்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்கு நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, 2001, 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்ட சாமிநாதன், 7331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுகவில் செல்வாக்கு மிக்க பதவியான மாநில இளைஞர் அணி செயலாளர் பதவியில் ஸ்டாலின் இருந்த போது, துணை செயலாளராக பதவி வகித்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். பின்னர் 2017ஆம் ஆண்டு இளைஞர் அணி செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக நியமிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து அப்பதவியில் இருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகினார். பின்னர் அவருக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
திருப்பூர் திமுக மாவட்ட செயலாளர், நெடுஞசாலைத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த வெள்ளக்கோவில் சாமிநாதன், நிர்வாக திறன் மிக்கவர் மட்டுமின்றி, திமுக தலைமைக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.