சென்னை: வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், அதிமுக அரசை அடிமை அரசு என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.
வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தியது. இதன் ஒரு பகுதியாக வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழக துணை தலைவர் கலி பூங்குன்றன், திமுக செய்தி தொடர்பாளர், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசும்போது, “கரோனா காலத்தில் பல உதவிகள் ஒன்றினைவோம் வா என்ற திட்டம் மூலம் செய்து வந்தோம். தற்போது விவசாயிகளுக்காக போராடி வருகின்றோம். இதே நேரத்தில் இரண்டு பேர் இணைந்து யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் பேசி வருகின்றனர். இரண்டு பேரும் சேர்ந்து பாஜக உறுப்பினரை கூட முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புகள் அதிகம். அந்த அளவு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.