திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிகாரிகளை அவ்வப்போது நிலைமைகளுக்கேற்பவும், தேவைகளுக்கேற்பவும் இடமாற்றம் செய்வது ஆட்சியாளர்களின் உரிமை என்றபோதும், இந்த நோய்த் தொற்று காலத்தில் அதிமுக அரசின் முன்னுக்குப்பின் முரணான நடவடிக்கைகளும், அதில் உள்ள அரசியல், சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்திவருகிறது.
பாதிப்புகளை குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, ‘கோவிட்-19 பாசிட்டிவ்’ நோயாளிகள் இறந்திட நேரும்போது, ‘நெகட்டிவ்’ எனக் குறிப்பிடப்படுவது குறித்து தொடர்ந்து ஆதாரப்பூர்வமான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன. சென்னையில் மட்டும் 400க்கும் அதிகமான கரோனா மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதால்தான், சுகாதாரத் துறை இணை இயக்குநர் வடிவேலன் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு, ஆய்வை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்துதான் சுகாதாரத்துறை செயலர் மாற்றத்திற்கான அறிவிப்பும் வெளியானது.