இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' செயல் திட்டத்தில், மகாராஷ்டிராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி ஆலோசனை மூலமாக, அவர்கள் இந்த கரோனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் என்பது தெரிந்தது. இதுகுறித்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் தெரிவித்தேன். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் அவரிடம் கலந்தாலோசித்துள்ளார்.
தொழிலாளர்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப தங்களின் அரசு தயாராக இருக்கிறது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடமும் டி.ஆர். பாலு விவரத்தைத் தெரிவித்துள்ளார். மத்திய அரசும் சிறப்பு ரயில் மூலம் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகத்திற்குத் தொழிலாளர்களை அனுப்பத் தயாராக உள்ளது. தமிழக அரசுத் தரப்பிலிருந்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அந்தத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள்.