இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய பாஜக மீது கொண்ட பற்றாலும், 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்தை மறைப்பதற்காகவும், என்னை மனம் போன போக்கில் விமர்சனம் செய்துள்ளார்.
14 மாநிலங்களுக்கும் ஒதுக்கிட பரிந்துரைத்த வருவாய் பற்றாக்குறை மானியத்தை, மத்திய அரசே இன்னும் முழுமையாக ஒதுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி விட்டு, இப்போது, ’முதன்முதலில் வருவாய் பற்றாக்குறை மானியத்தைப் பெற்றோம். முதல் தவணையையும் பெற்று விட்டோம்’ என்று, சிறிதும் நாணமின்றிப் பின் வாங்குவது ஏன்? மத்திய அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சி செய்வது ஏன்?
’மத்திய அரசு பங்கேற்கும் திட்டங்களில், தனது பங்கை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது’ என்றும், ’தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்யவே சிறப்பு உதவி மானியம் வழங்க தனிப்பட்ட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்கிறோம்’ என்றும் காரசாரமாக பேசிவிட்டு இன்றைக்கு, முதலமைச்சரின் முயற்சியால் நிதிப் பகிர்வு அதிகம் கிடைத்தது என்று அரண் அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்?