இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இடஒதுக்கீட்டின் மீது மத்திய பாஜக அரசு நடத்தும் அநியாயமான தாக்குதலை தமிழ்நாட்டில், நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது.
ஏற்கனவே 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 50 விழுக்காடு கூட நிரப்பாமல் வஞ்சித்து, மருத்துவக் கல்வியில் அறவே நிராகரித்து, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தின்கீழான அடிப்படை உரிமையை விதவிதமாக பாழ்படுத்திவரும் மத்திய பாஜக அரசு, இப்போது 'க்ரீமிலேயர்' வருமான வரம்பிற்கு நிகர சம்பளத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள், இடஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டி கொண்டு பாய்ச்சுவது போல் இருக்கிறது.
மேலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 2015ஆம் ஆண்டிலேயே ’க்ரீமிலேயர் வருமான வரம்பு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்’ என்று தெளிவான பரிந்துரையை வழங்கியிருக்கிறது. அப்போதே பிற்படுத்தப்பட்டோர் சமுதாய நலனுக்கான நாடாளுமன்றக் குழு ’க்ரீமிலேயர் வருமான வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்’ என்று ஒருமனதாக பரிந்துரை அளித்துள்ளது.