இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், ”திமுகவினருக்கு செப்டம்பர் மாதம் எப்போதுமே களிப்பும் ஊக்கமும் தரும் மாதம்தான். செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்தநாள், அதே நாள்தான், திமுகவின் பிறந்தநாளும். இதனை முப்பெரும் விழாவாக நாம் கொண்டாடுவது வழக்கம். திருவிழாவிற்கு முன் பந்தற்கால் நடுவது போல, இந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, நேற்று (செப்டம்பர் 9) பொதுக்குழு அமைந்துவிட்டது.
அதில் முக்கியமான 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்தீர்மானங்களுக்கு செயல் வடிவம் கொடுத்திட அவற்றை அப்படியே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவற்றை நிறைவேற்றிடும் வகையில் உங்களது உழைப்பைத் தாருங்கள். ஒருங்கிணைந்து செயலாற்றுங்கள். காழ்ப்புணர்வு கொண்டு வெறும் வாயை மெல்லுவோருக்கு அவல் அள்ளிப்போடும் செயல்களைத் தவிர்த்து, மக்களிடம் சென்று களப்பணிகளை மேற்கொள்ளுங்கள்.