இந்தியாவின் பல மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பயின்றோர் மட்டுமின்றி, உயர்கல்வி கற்றோரின் எண்ணிக்கையும், விகிதமும் கூடுதலாக உள்ளது எனவும், தமிழ்நாட்டின் கல்விமுறையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய மத்திய அரசு, நமது மாணவர்களின் வாய்ப்புகளைக் கெடுக்கும் வகையிலேயே கடந்த ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ” இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று அஞ்சுகிற அளவுக்கு, அதன்மீது ஒரு நூறு தாக்குதல்களை தொடுத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை என்பதுபோல, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் காஷ்மீர் முதல் தமிழகம் வரை கைது நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டப் பாய்ச்சல்கள் உள்ளிட்டவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமர்ஜென்சியை நேரடியாகவே நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்ட திமுகவை, இத்தகைய பூச்சாண்டித்தனங்களால் எவராலும் எதுவும் செய்து விட முடியாது.