இதில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “குடியுரிமைக்கே பாதுகாப்பு இல்லை என்றுதான் இதற்குக் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பும், அச்சமும் சூழ்ந்து பதற்றத்தில் உள்ளது. டெல்லி கலவரங்கள் மூலம் காவல் துறையினர் யார் கையில் உள்ளனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தலைநகர் டெல்லிக்கே இந்நிலைமை என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை எண்ணிப் பார்க்க முடியவில்லை. செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைக் காக்க மத்திய அரசு தவறியது என்பதைவிட, சட்ட ஒழுங்கைக் காக்க மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்றே தோன்றுகிறது.
மத்திய அரசுக்குத் தெரிந்த ஒரே பதில் எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டங்களைத் தூண்டுகின்றன என்பதுதான். மேடையில் இங்கு வெவ்வேறு இயக்கம், தேசிய, பொதுவுடமை, திராவிட தத்துவங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இருப்பது, இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்றத்தானே தவிர, எங்களுக்கு அரசியல் நடத்த 1000 பிரச்னைகள் உள்ளன இந்த மோடி ஆட்சியில்.
இந்தியர்களைக் காக்கக்கூடிய போர் இது. இச்சட்டத்தால் ஒட்டுமொத்த இந்தியர்களும் பாதிக்கப்படுவர். நாங்கள் இந்துக்களின் எதிரி போன்று கட்டமைக்க ஒரு கூட்டம் உள்ளது. அசாமில் பல லட்சம் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்துப் பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?