அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதையொட்டி திமுக முழுவீச்சில் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் அடுத்த பத்து நாட்களுக்கான பரப்புரை பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திலும், மகளிரணி செயலாளர் கனிமொழி எடப்பாடியிலும், 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கவுள்ளனர்.
அதன் முதற்கட்டமாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரையை, கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இன்று தொடங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் கனிமொழி வரும் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கவுள்ளார். அதேபோல், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, பேரா.சபாபதி மோகன் ஆகியோரும் தேர்தல் பரப்புரையை தொடங்க இருக்கின்றனர்.
டிசம்பர் 2 முதல் துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், செந்தில்குமார், பார்த்திபன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் கார்த்திகேயே சிவசேனாபதி ஆகியோர் டிசம்பர் 11 முதல் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர்.