சென்னை: மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்திருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விழுக்காடு என்பது அநீதியாகும் எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் படுகுழியில் தள்ளி - தற்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு அளிக்கும் 50 விழுக்காட்டை முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களிலும் சமூகநீதியைத் தட்டிப் பறிக்கும் விதமாக - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் வம்படியாகப் பின்பற்ற மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு முழுவதும் இருந்து மத்திய தொகுப்பிற்கு (All India Quota) மாநிலங்கள் அளித்துள்ள 9550 முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில், இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைத்திருப்பது வெறும் 371 இடங்கள் மட்டுமே. சமூகநீதிக்கு எதிரான குருதி பா.ஜ.க. அரசின் நாடி நரம்புகளில் ஆழமாக ஓடிக் கொண்டிருப்பதால் - மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் கொடுக்கும் மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்த முன்வராமல் அடம்பிடிக்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாண்டு கால அநீதியை அனுமதித்திருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், முன்னர் இழைத்த தவறுகளை உணர்ந்து, இனிமேலாவது - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையை அச்சுப் பிசகாமல் நிறைவேற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.