தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்கள் அமரவைத்த அரியணை இது, தூக்கிவிடுவார்கள்; ஜாக்கிரதை! - ஸ்டாலின் கொக்கரிப்பு - letter to PM Modi

சென்னை: இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

dmk-stalin-slams-for-communal-violence-case-against-49-scholars

By

Published : Oct 5, 2019, 3:01 PM IST

Updated : Oct 5, 2019, 3:58 PM IST

நாடு முழுவதும் கும்பல் வன்முறை அதிகரித்துவிட்டதாகவும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும்படியும், திரைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜூலையில் கடிதம் எழுதினர். இவர்கள் மீது தற்போது தேச துரோக வழக்கு பாய்ந்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள், மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள். பிரதமருக்குக் கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறைப் பிரமுகர்கள் 49 பேர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்திருப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக அக்கறை உள்ள அத்தகைய முன்னோடிகளை தேச துரோகிகள் என்று சொல்வதைவிடப் பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடியாது; இது மிகவும் வெறுத்து ஒதுக்க வேண்டிய முன்னுதாரணம் ஆகும். அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாக இருக்கும் மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் நிலைநாட்டுங்கள் என்று கூறுவது எப்படி தேச துரோகமாகும்?

இது எத்தகைய கொடுமை? சட்டத்தின் ஆட்சிக்கு, பாஜக தலைமையிலான மத்திய அரசில் இப்படியொரு சோதனையா? என்று கேள்வி எழுப்பும் அதேநேரத்தில், மத்தியிலுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சி அமைக்கக் கிடைத்திருக்கும் பெரும்பான்மை, மக்கள் மனமுவந்து அளித்தது. அதைத் திருப்பி எடுத்துக் கொள்ளும் மாட்சிமைமிக்க அதிகாரமும் மக்களிடமே இருக்கிறது - இதுதான் ஜனநாயகம் கட்டமைத்து வைத்துக் கொண்டுள்ள தற்காப்பு அரண்! அதை மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்து, 49 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கினை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated : Oct 5, 2019, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details