திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியர் சமுதாய மக்களுக்குப் பல சாதனைகளையும் எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி- அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கிறது. ஆனால், 'கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களைக் கைது நடவடிக்கைகள் மூலம்- துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அதிமுக ஆட்சியாளர்கள் என்பதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள்.
போராட்டக்களத்தில் நின்றவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்துப் போற்றிடும் வகையில், மூன்றாவது முறையாக முதலமைச்சரானதுடன் 1989 மார்ச் 28ஆம் தேதியன்று வன்னியச் சமுதாயத்திற்கு 20 விழுக்காடு தனி ஒதுக்கீடு அளித்து அரசு ஆணை வெளியிட்டதோடு மட்டுமின்றி- அவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதிதான்.