உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் சிகிச்சை பலனின்றி இன்று (பிப். 26) காலமானார். அவருக்கு வயது 89.
தா. பாண்டியன் ஐயாவிற்காக அரசியல் தலைவர்களின் இரங்கல்...!
சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர் -வைரமுத்து!
"தா. பாவிற்கு 21 வயதிலிருந்தே கட்சிக்காரர்
கோணாத கொள்கையாளர்
ஈட்டிமுனைப் பேச்சாளர்
பெரியாரின் பெருமை பேசிய கம்யூனிஸ்ட்
ஜனசக்தியின் அடங்காத ஆசிரியர்
ஜீவாவுக்குச் சிலையெழுப்பிய சிற்பி
சிறிதும் சாயம் போகாத
சிவப்புத் துண்டுக்காரர்.
போய் விட்டீரே!
உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா
பாசமுள்ள பாண்டியரே".
‘பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது’ -கமல் ட்விட்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட், “பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா. பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டிடிவி இரங்கல்
“முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தா. பாண்டியன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். கட்சிகளைத் தாண்டி அம்மா மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். தனிப்பட்ட முறையில் என்னோடு நட்புடனும் அன்புடனும் பழகியவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘மக்களுக்காக வாழ்க்கை பயணம் நடத்தியவர் தா.பா’ -கே.எஸ். ராதாகிருஷ்ணன்!
திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இரக்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சற்று பின்னோக்கிப் பார்க்கையில் அவருடனான அறிமுகம் 1972இல் இருந்து. அவருடைய இளமைக் காலத்தில் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பிதப்புரத்தில் தலைமறைவாக வாழ்ந்தார். பிதப்புரத்தில் தான் பாரதியின் தந்தையார் பருத்தி ஆலை தொடங்கி அது முழுவதும் முடியாமல் இன்றைக்கும் அந்த ஆலை இடிபாடுகளுடன் மகாகவி பாரதியை நினைவுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. கோவில்பட்டி பக்கம் அடிக்கடி வருவார்.
நல்ல சிந்தனையாளர். ஆங்கிலப் பேராசிரியர். நுண்மான் நுழைப்புலம் கொண்டவர். உசிலம்பட்டியில் பிறந்தாலும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். பழ கருப்பையாவுக்கு பேராசிரியர். என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கிறார். கி.ரா.வுடன் அவரை சந்தித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் கடந்த கால நினைவுகள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். அவருடைய மறைவு கவலையளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...காலமானார் தா. பாண்டியன்!