இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து ஸ்டாலின் பேசுகையில், "மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்த, திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வருகின்ற 23ஆம் தேதி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காலை 10 மணி அளவில் சென்னையில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், "குடியுரிமை சட்டம் எதிர்ப்பு பேரணி" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி நடத்த உள்ளோம்.
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் குடியுரிமை சட்டம் அமைந்துள்ளது. இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள் விடுப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்து கேள்வியெழுப்பும் வகையில் இப்பேரணி நடைபெறும்.
மேலும் அதிமுக, பாமக மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரித்து வாக்கு செலுத்திய காரணத்தினால்தான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழின துரோகிகளான அவர்களை மக்கள் நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.