கரோனா நோய்க் கிருமியின் பரவலைத் தடுப்பதில் மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், ஐஜேகே கட்சித் தலைவர் பச்சை முத்து, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்றைய தினம் நடைபெற இருந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதால், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேனாம்பேட்டை காவல் துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. திமுக தரப்பில் விளக்கம் அளித்தும் அதை காவல் துறையினர் ஏற்கவில்லை. இச்சூழலில் திமுக சார்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.