சென்னை: பிரதமருக்கு திமுக எம்.பி., வில்சன் எழுதிய கடிதத்தில், "இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இழைக்கப்படும் சமூக அநீதி - நீதிமன்ற தீர்ப்புகள் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டையை அரசியலமைப்பின் சில விதிகளை திருத்துவதன் மூலம் அரசியலமைப்பு முட்டுக்கட்டைகளை நீக்குதல் – மக்கள் தொகை கணக்கெடுப்பினை ஒன்றிய பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றுதல் தொடர்பாக 29.03.2022 அன்று பாராளுமன்றத்தில் பேசினேன்.
29.3.2022 அன்றைய மாநிலங்களவையில் நான் ஆற்றிய உரையினைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதி நிதித்துவம் வழங்கிடவும், கடந்த 30 ஆண்டுகளாக சாதிய கட்டமைப்பினால், இந்த சமூகங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் சமூக அநீதியை சரி செய்திட வேண்டும் என்கிற நீண்டகால சட்டபூர்வ கோரிக்கையையும் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
1992 ம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள், இந்திய ஜன நாயகத்தில் ஒரு முக்கிய தருணமாகும்.. IX மற்றும் IXA ஆகிய அத்தியாயங்களின் அறிமுகமானது, அடிமட்ட அளவில் உள்ளூர் சுய ராஜ்ஜியத்தை நிறுவியது. இதன் முதன்மை நோக்கம் என்பது அதிகாரங்களை ஜனநாயக ரீதியில் பரவலாக்குவதும், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நிர்வாகத்தில் பங்கேற்க வைப்பதுமாகும்.. இதன் மூலம் நிர்வாகத்தை மிகவும் பொறுப்புள்ளதாகவும், பங்கேற்புத் தன்மை கொண்டதாகவும் மாற்றுவதோடு, கிராமப்புற சமூகங்களை மேம்படுத்தவும் முடியும்.. மக்களுக்கு அதிகாரங்களை சமமாக பகிர்ந்தளிப்பதே நோக்கமாக இருந்ததால், எஸ்.சி/எஸ்.டி சமூகங்கள் மற்றும் இந்த சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாய இடஒதுக்கீட்டை இந்த திருத்தங்கள் வழங்கியது.
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைப் பொறுத்தவரை, அரசமைப்புச் சட்டப்பிரிவு 243-D(6) மற்றும் 243-T(6) போன்றவை இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுவதற்கு மாநில சட்டமன்றங்களுக்கு அதிகாரமளித்தது. எப்படி இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி விவகாரத்தில் அத்தகைய இடஒதுக்கீடு அந்த பகுதியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் இந்த பிரிவைச் சார்ந்த மக்கள் தொகை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அரசியலமைப்பு கூறுகையில், அது போல் இல்லாமல் அரசியலமைப்பின் 243-D(6) மற்றும் 243-T(6) போன்ற பிரிவுகள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படவேண்டிய இடஒதுக்கீட்டு விகிதம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடுகளை வழங்க மாநில அரசுகள் இந்த சட்டங்களை பயன்படுத்தும்போது, சட்ட சிக்கல்கள் உருவாகுவதோடு, உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுகள் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகின்றன.. சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி இடஒதுக்கீட்டை வழங்க விரும்பியது.
அப்போது, உள்ளாட்சி வாரியாக ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் வாழும் ஓபிசி மக்கள் தொடர்பான தரவுகள் எதுவும் இல்லை என்கிற அடிப்படையில் மாநில அரசின் கொள்கை முடிவானது, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.. அதே போன்று, மத்திய பிரதேசத்தில் நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு, தரவுகள் அடிப்படையில் ஆராய்ந்து வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன், உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீடானது 1995 ம் ஆண்டு முதல் மறுக்கப்பட்டு வருகிறது. யூனியன் பிரதேச அரசாங்கமானது, 2021 உள்ளாட்சித் தேர்தல்களில் ஓபிசி மற்றும் எஸ்.டி வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 2019 ஆண்டின் இடஒதுக்கீட்டினை அனுபவ தரவுகள் இல்லை என்று கூறி திரும்பப் பெற்றது.. இதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகமானது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த அனைத்து வழக்குகளிலும், உள்ளாட்சித் தேர்தல்களில், ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் மாநிலங்களுக்கு சட்டத்த்டையாக இருப்பது என்னவென்றால், நீதித்துறையால் முன் நிபந்தனையாக வைக்கப்பட்ட அனுபவ தரவுகள் தேவை என்பதே.. நீதித்துறை தீர்ப்புகளின்படி, அரசியல் ரீதியாக ஓபிசி வகுப்பினரின் பின் தங்கிய நிலையை கண்டறியவும், உள்ளாட்சி வாரியாக தேவைப்படும் இடஒதுக்கீட்டு விகிதங்களை தீர்மானிக்கவும் மாநிலமானது ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும். இதற்காக, ஓபிசி தொடர்பான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளை அணுகுவது இன்றியமையாததாகிறது.
மார்ச் 2011 ல், 15 வது பாராளுமன்றத்தில் எஸ்.சி/எஸ்.டி பிரிவுகளைத் தவிர மற்ற அனைத்து சாதிகளையும் உள்ளடக்கிய சமூக பொருளாதார சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஒன்றிய அமைச்சகமானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உதவியுடன் சாதிவாரி கணக்கெடுப்புகளை மேற்கொள்ள ரூ.4893.60 கோடிகளை செலவழித்தது. இந்த சமூக பொருளாதார சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகளின் மூல தரவுகளானது, 2015 ல் ஒன்றிய அரசால் சேகரிக்கப்பட்டது.
பிறகு தங்களின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவானது, இதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதனைக் கண்டறிய நிதி அயோக்கின் நிபுணர் குழு மூலமாக தரவுகளை திரையிட முடிவு செய்தது.. ஆனால், இன்று வரை இந்த மேற்கூறப்பட்ட குழுவானது இயங்கவும் இல்லை. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் வெளியிடப்படவும் இல்லை. ஒன்றிய அரசால் 2011 ம் ஆண்டு சமூக பொருளாதார சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட போதிலும், காரணமே இல்லாமல் இன்று வரை வெளியிடப்படாமல் இருக்கிறது. அதேபோல் ஒன்றிய அரசானது, புதியதாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை மேற்கொள்ளவும் மறுக்கிறது.