கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
செப்டம்பர் 19ஆம் தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பாத தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், திமுக எம்.பி. ரமேஷ், அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் தான் மரணத்திற்கு காரணம் எனவும், தந்தையின் உடலில் பல ரத்த காயங்கள், அடித்து துன்புறுத்தி அடையாளங்கள் இருந்ததாகவும் கூறி, கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு பின் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு திமுக எம்.பி. ரமேஷ் உள்பட ஐந்து பேருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எம்.பி. ரமேஷ், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
விசாரணைக்குப் பின் கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி எம்.பி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.