பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நேற்று தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் . அந்த வீடியோவில் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தது யார் என விவாதிக்க தயாரா என திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு அறைகூவல் விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்நேற்றிரவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்க நான் தயார் என பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், செந்தில்குமார் இன்று ஆறு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அந்த வீடியோவில் அவர், “அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு வணக்கம். நான் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். ராமதாஸ் ஒரு அறிக்கையும், அன்புமணி ராமதாஸ் ஒரு காணொலி காட்சியும் வெளியிட்டிருக்கிறார்கள். விவாதிக்க தயாரா என ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.
நான் உங்களிடம் விவாதிக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறீர்கள். குடியுரிமை திருத்த மசோதாவில் 125 வாக்குகள் ஆதரவாக விழுந்தன . இதில் 12 வாக்குகள் அதிமுக மக்களவை உறுப்பினா்களின் வாக்குகள், பாமகவின் ஒரு வாக்கு என 13 வாக்குகள் குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததால் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது .