சென்னை: நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வகுக்கப்பட்ட திட்டத்தில், இதுவரை எத்தனை ரயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. விலசன் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்கு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் இந்த திட்டம் இதுவரையில் எத்தனை ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பி. வில்சன், "அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவும் திட்டத்திற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 95 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் 200 கோடி ரூபாய் பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக உள்ள 111 ரயில் நிலையங்களில் 23 ரயில் நிலையங்களில் இதுவரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஸ்வாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து தொடரப்பட்ட வழக்குகள் மூலமாக ரயில் நிலையங்களின் சிசிடிவி கேமரா கட்டாயம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது,