தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015 ஜூன் மாதம் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது. அதன்படி 2015 நவம்பர் 8ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சிபெற்ற 74 பேரில் 62 பேர் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனித நேய பயிற்சி மையம், அப்பல்லோ பயிற்சி மையம் ஆகிய மையங்களில் படித்தவர்களாவர்.
தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் வெளியாகி விட்டதால் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் எனத் தேர்வெழுதிய ஸ்வப்னா என்ற திருநங்கை 2017ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், குரூப்-1 தேர்வை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், முறைகேடு குறித்து தன்னிச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டினார்.