திமுக தலைமை நிலையச் செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கு.க. செல்வம் நேற்று திடீரென டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை, மாநில பாஜக தலைவர் முருகனுடன் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார். மேலும், மோடி அரசை விமர்சிக்கும் காங்கிரசுடன் திமுக உறவை முறித்துக்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, கு.க. செல்வத்தின் கட்சி பொறுப்புகள் அனைத்தையும் பறித்து, திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கு.க. செல்வத்தை, பாஜகவினர் காவித் துண்டு அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து நேராக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்திற்கு அவர் சென்றார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ராமர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய செல்வம், செய்தியாளர்களைச் சந்தித்தார்.