தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த நவம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த திருத்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, அரவக்குறிச்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், ” கரூர் மாவட்டத்தில் திடீரென 30 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெயர் சேர்க்க, நீக்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் போக்குவரத்துத்துறை அமைச்சரின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள், திமுகவினருக்கு வழங்கவில்லை.
பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் புகாரளித்தும் எந்த பதிலும் இல்லை. எனவே, புகார்களை பரிசீலித்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணைய விதிகளின்படி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் “ எனக் கோரியுள்ளார்.