அடையாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டுவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், அங்கு நடக்கும் மணல் கொள்ளையைக் கண்டித்தும் சைதாப்பேட்டை ஆடு தொட்டி பாலம் அருகில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுகவினரும், அப்பகுதி மக்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன், ”அடையாற்றில் வேதியியல் ரசாயனங்கள் கலப்பதாகவும், அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தவும் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகங்கள், பொதுப்பணித் துறை இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆதனூரில் தொடங்கி 42 கி.மீ. நீண்டுசென்று கடலில் கலக்கும் அடையாற்றின் இருபக்கங்களிலும் வெள்ளத்தடுப்புச் சுவர்கள் கட்டப்பட வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
அதன்பிறகு அரசு இதற்காக 104 கோடி ரூபாய் ஒதுக்கி, வெறும் 875 மீட்டருக்கு சுவர் கட்ட தொடங்கியுள்ளனர். மீதியுள்ள பகுதிகளில் வெறும் மண்ணை வைத்து அணைத்துவிட்டு ஆற்றை பலப்படுத்திவிட்டதாகக் கூறுகின்றனர்.