தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கைதான திமுக எம்.எல்.ஏக்கள் விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சென்னை: நியாய விலைப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ எம்.கே. மோகன் உள்ளிட்ட ஐந்து பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

கைதான திமுக எம்.எல்.ஏக்கள் விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம்
கைதான திமுக எம்.எல்.ஏக்கள் விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம்

By

Published : Apr 20, 2021, 4:28 PM IST

2017ஆம் ஆண்டு நியாய விலைக் கடைகளில் விற்கப்படும் பொருள்களின் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தியதைக் கண்டித்து சென்னை அண்ணா நகரில் அனைத்து நியாய விலைக் கடை முன்பும் திமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திமுக எம்.எல்.ஏ எம்.கே. மோகன்

அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏ எம்.கே. மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் எம்.கே. மோகன், அதியமான், ஏ.எம். வேலாயுதம், சந்திரபாபு, செல்வம் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஐந்து பேர் விடுதலை

இந்த வழக்கில் இன்று (ஏப். 20) தீர்ப்பளித்த நீதிபதி ஆலிசியா, அண்ணா நகர் எம்.எல்.ஏ எம்.கே. மோகன் உள்ளிட்ட ஐந்து பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக புகார் ஏதும் கொடுக்கப்படாத நிலையில், காவல் துறை புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளதால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details