சட்டப்பேரவையில் இன்று கொரோனா குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீமானத்தின் மீது பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “ கொரோனா வைரஸ் தொடர்பாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தற்போது 10 லட்சம் முகக்கவசங்களை நாம் கையிருப்பு வைத்துள்ளோம். தேவையான மருந்துகளும், மருத்துவ ஊழியர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள். எனவே அனைவரும் சுய சுகாதாரத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை “ என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ” எங்கு பார்த்தாலும் கொரோனா பயம் உள்ள நிலையில் ஒன்றும் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் புள்ளக்குட்டிக்காரர்கள். உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆனால், இடைத்தேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம். ஏசியில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் என்கிறார்கள். இங்கும் அதிகமாக ஏசி பயன்படுத்தப்படுகிறது. முதலில் இங்குள்ளவர்களுக்கு மாஸ்க் வழங்கி காப்பாற்றுங்கள் “ என்றார். அப்போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.