தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று ஊரக உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது, திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பதிலளித்தனர்.
இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், மறைமுகத் தேர்தல் தொடர்பாகவும் கேள்வி எழுப்பிய தி.மு.க. கொறடா சக்கரபாணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”நேரடி, மறைமுக தேர்தல் குறித்து அப்போதைய சூழ்நிலையின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டது.
நீங்கள் கடனை தள்ளுபடி செய்வோம் என மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து பரப்புரைகளை மேற்கொண்டீர்கள். அதை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். உண்மை நிலை தெரிந்த பின்னர், எங்களுக்கு வெற்றி அளித்திருக்கிறார்கள்” என பதிலளித்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, ”2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்”என்றார்.
அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில்,” 2021 பொதுத் தேர்தல் பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள். ஆட்சியிலேயே இல்லாத நீங்கள் எப்படி கடனை தள்ளுபடி செய்வீர்கள். 2021 தேர்தலின்போது நீங்கள் வாக்குறுதி அளிக்கலாம். இப்போது நடைபெறும் ஆட்சி அ. தி.மு.க. ஆட்சி என பேசிக்கொண்டிருக்கும் போதே, தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் அமர்ந்து கொண்டே முதலமைச்சரை பேச விடாமல் குறுக்கீடு செய்தபடியே இருந்தார்.
இதனால் கோபம் அடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யார் பேசினாலும் தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் குறுக்கிட்டு பேசுவதையே வேலையாக இருக்கிறார் என ஆவேசத்துடன் தெரிவித்தார். இதனால் அதி.மு.க. – தி.மு.க. உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது.