திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனின் துணைவியார் லதீஃபா பேகம் இன்று இயற்கை எய்தியதையடுத்து, திருச்சியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று, உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனின் துணைவியார் லதீஃபா பேகம் இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு நான் மிகவும் வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் திருச்சி செல்லும் போதெல்லாம், அவர்களின் உடல் நலம் குறித்து விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அம்மையார் அவர்கள் என்னைப் பார்த்தவுடன், 'உங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது?' என்று, முந்திக் கொண்டு எனது உடல்நலனை அன்புடன் விசாரிப்பார்கள். அத்தகையதோர், அன்பில் உருவான அம்மையார் லதீஃபா பேகத்தின் மறைவு எனக்குப் பெரும் துயரம் அளிப்பதாகும்.