சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்திற்குள் திமுக பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்குத் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வந்தனர்.
4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகள் ஆட்டோவில் வந்து தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். ஆட்டோ எண்ணை வைத்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் கணேசன், அவரது மகன் தினேஷ் குமார், இன்பா, கார்த்திக், குமரேசன் ஆகியோர் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-வதில் நேற்று சரணடைந்தனர். வருகிற 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரை எஸ்பிளனேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டு சரணடைந்தது அதிமுக பிரமுகர் கணேசனின் மற்றொரு மகனான சதீஷ் என்பது காவல்துறை விசாரணையில்
தெரிய வந்தது.
அவரை தேடும் பணியில் ஈடுபட்டபோது செல்போன் டவர் லொகேஷனை வைத்து தேடிய போது செங்கல்பட்டு நீதிமன்றத்திற்குள் காட்டியுள்ளது. தனிப்படை போலீசார் அங்கு சென்று பார்த்த போது நீதிமன்றத்திற்குள் அவர் பதுங்கி இருந்தது தெரிந்தது. உடனே போலீசார் செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி உத்தரவைப்பெற்று பதுங்கி இருந்த சதீஷை கைது செய்தனர். விசாரணையில் சதீஷ் வழக்கறிஞர் என்றும், 5 பேர் சரண் அடைய வந்தபோது நீதிமன்றத்திற்குள் பதுங்கி இருந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு கைதான சதீஷை கொண்டு சென்று எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் சரண் அடைந்துள்ள அதிமுக பிரமுகரான கணேசனுக்கும், கொலை செய்யப்பட்ட சவுந்திரராஜனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுவர் விளம்பரம் எழுதுவதில் கணேசனுக்கும் சவுந்தரராஜனுக்கும் மோதல் நடந்துள்ளது. சவுந்தரராஜன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில், கணேசன் கொலை மிரட்டல் மீது நடவடிக்கைகோரி புகார் கொடுத்தார். இதனால் மோதல் முற்றி கொலையாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திமுக பிரமுகர் கொலை வழக்கு: நீதிமன்றத்திற்குள் பதுங்கி இருந்த வழக்கறிஞர் கைது - திமுக பிரமுகர் கொலை வழக்கு
பிராட்வே பேருந்து நிலையத்திற்குள் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்திற்குள் பதுங்கி இருந்தவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Murder arrest